வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாைவயொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காளையார்கோவில்
காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாைவயொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி திருவிழா
காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியாகுறிச்சியில் பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட இக்கோவிலில் நீதி கேட்டு வரும் பக்தர்களுக்கு அம்பாள் உரிய நீதியை வழங்கி அருளை தரும் கோவிலாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டிற்கான இந்த விழா கடந்த 30-ந்தேதி காலை காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை கேடக விமானத்திலும், இரவு பூதகி வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், தங்க குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு யானை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தங்கரதம் புறப்பாடு
இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பக்தர்கள் பால்குடம், சந்தன குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், இரவு மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க ரதம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில், உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் நாராயணி, கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு காளையார்கோவில் தாசில்தார் பஞ்சவர்ணம் மற்றும் அரசு அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.