போலீஸ் நிலையம் முன் பா.ஜனதா பிரமுகர் தீக்குளித்ததால் பரபரப்பு
போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதா பிரமுகர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி,
போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதா பிரமுகர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜனதா பிரமுகர் தீக்குளிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வன் (வயது 20). இவரிடம் சட்டம்-ஒழுங்கு காரணங்களை கூறி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தாசில்தார் முன்னிலையில் எழுதி கொடுக்குமாறு போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி அவரும் பரமக்குடி தாசில்தார் ரவி முன்னிலையில் எழுதி கொடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் மனவருத்தம் அடைந்த தமிழ்ச்செல்வன், போலீசார் தொடர்ந்து தன்னை தொந்தரவு செய்து வருவதாக கூறி நேற்று முன்தினம் இரவு கையில் மண்எண்ணெய் கேனுடன் பார்த்திபனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அங்கே போலீசாரை கண்டித்து கோஷமிட்டு, போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணெைய ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தமிழ்ச்செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் தீக்குளித்ததற்கு போலீசாரின் நடவடிக்கைதான் காரணம் என்றும், எனவே போலீசாரை கண்டிப்பதாக கூறி பா.ஜனதா ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா முன்னிலையில் பார்த்திபனூர் நான்கு வழிச்சாலையில் பா.ஜனதா கட்சியினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், மறியல் தொடர்ந்தது. ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்களை ேபாலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.