பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
ஆலங்குடி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 44). விவசாயி. இவரது சித்தப்பா கருப்புடையார் மகன் மாணிக்கம். சுந்தர்ராஜன் பூர்வீக இடம் மாங்கோட்டை கிராமத்தில் 2¾ ஏக்கர் உள்ளது. இந்த இடத்திற்கு பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று ஆலங்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 9-ந் தேதி சொத்து பதிவு செய்யும் விவகாரத்தில் தடங்கல் மனு ஒன்றை சுந்தர்ராஜன் அளித்துள்ளார்.
மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாணிக்கம் என்பவர் வருவாய்த்துறை பதிவேடுகளில் தனது பெயரை போலியாக மாற்றி இன்று அவரது மனைவி லட்சுமி என்பவரின் பெயரில் தானம் செட்டில் மெண்ட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில், தடங்கல் மனுவையும் மீறி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுந்தர்ராஜனிடம் அனுமதி பெறாமல் மாணிக்கம் தரப்பில் பத்திரப்பதிவு நடை பெறுவதாக சுந்தர்ராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஆலங்குடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு விரைந்து வந்த சுந்தர்ராஜன் திடீரென்று அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்து பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.