ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குறிச்சியார்பட்டி 6-வது வார்டு கிழக்கு தெருவில் 200-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் தெருவில் கழிவுநீர் வாறுகால், சாலை, போதுமான அளவு குடிநீர், கழிப்பறை மற்றும் மயான பாதை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இதுவரை அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கிழக்கு தெருவில் தற்போது கழிவு நீர் வாருகால் அமைக்காமல் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் வாருகால் இன்றி சாலை அமைப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் சில தினங்களுக்குள் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.