கிராம மக்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் மனு
கிராம மக்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் மனு அளித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுகன்பூர் கிராம ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை என்பவர், ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், சிறுகன்பூர் கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்ததால், எனது வலது கால் அகற்றப்பட்டது. இதன்பின்னரும் நான் சிறுகன்பூர் கிராம ஊராட்சி செயலாளராக தொடர்ந்து பணிபுரிந்து வந்தேன். ஆனால் ஊராட்சி தலைவர் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். மேலும் அவர் என்னை கொட்டரை கிராம ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்தார். அதனை எதிா்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்று, சிறுகன்பூர் கிராம ஊராட்சி செயலாளராக தொடர்ந்து பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வரகுபாடி கிராம ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். மாற்றுத்திறனாளியான எனது பணியிட மாறுதலை ரத்து செய்து மீண்டும் சிறுகன்பூர் கிராம ஊராட்சியில் தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.