ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2023 4:30 AM IST (Updated: 13 Oct 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி செயலாளர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்களை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதை கண்டித்தும், அந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்பின்னர் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஊராட்சி செயலாளர்களை தரக்குறைவாக பேசும் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் போராட்டம் நடந்தது.


Next Story