ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் விவகாரம்:-2 கிராமங்களை சேர்ந்த மக்கள் தனித்தனியாக மனு
ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் விவகாரம்:-2 கிராமங்களை சேர்ந்த மக்கள் தனித்தனியாக மனு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியனுக்கு உட்பட்ட தனிச்சியம் ஊராட்சி அலுவலகம் ஏற்கனவே டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது புதிய ஊராட்சி கட்டிடம் தனிச்சியம் கிராமத்தில் கட்டப்பட உள்ளது. இதற்கு டி.கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனிச்சியம் கிராம மக்கள் ஊராட்சி தலைவர் முத்துமாரி அற்புதராஜ் தலைமையில் ஏராளமானோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தனிச்சியம் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட அரசின் பணி உத்தரவு பெற்று தனிச்சியத்தில் கட்ட பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இங்கு கட்டுவதற்கு டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் கட்டிட பணி தடைபட்டுள்ளது. தனிச்சியம் வருவாய் கிராமமாக உள்ளது. இங்குதான் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. கிராமசபை கூட்டத்தில் குசவன்குளம், சேனாங்குறிச்சி, தனிச்சியம், சேரந்தை ஆகிய கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தனிச்சியத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டப்படுகிறது. எனவே தனிச்சியத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இதேபோல ஊராட்சி அலுவலகத்தை தங்களது ஊரில் இருந்து தனிச்சியம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்று டி.கிருஷ்ணாபுரம் கிராம தலைவர் பெருமாள் என்பவரது தலைமையில் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தனிச்சியம் ஊராட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக டி.கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்த நிலையில் தனிச்சியம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யக்கூடாது. இதனால் 2 கிராமத்திற்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி கட்டிடத்தை தனிச்சியம் கிராமத்தில் கட்டக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. ஒரே ஊராட்சியை சேர்ந்த 2 கிராம மக்கள் திரளாக ஒரே நேரத்தில் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.