தூக்கில் தொங்கிய நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பிணம்
காரியாபட்டி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பிணம் மீட்கப்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பிணம் மீட்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கிழவனேரி கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் கார்த்திக் (வயது 31). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இவருக்கு காரியாபட்டி பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் சென்றதாகவும், வீட்டை பூட்டி கொண்டு நீ்ண்டநேரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண், கார்த்திக்கின் நண்பர்களுக்கு தகவல் அளித்தார். உடனே அவர்கள் வந்து கதவை உடைத்து சென்று பார்த்த போது கார்த்திக் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
சாலை மறியல்
உடனே அவரை மீட்டு காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். அப்போது அந்த கிராம மக்கள் அவர் சாவிற்கு காரணமான நபரை கைது செய்யக் கோரி காரியாபட்டி-கள்ளிக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவுடன் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் பரிசோதனைக்காக கார்த்திக் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.