ஊராட்சி மன்ற அலுவலகம் சூறை; கிராமமக்கள் மறியல்
காரையூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அலுவலகம் சூறை-மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா காரையூரில் இன்று ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒரு தரப்பினர் காரையூர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மதியம் ஆர்ப்பாட்டக்காரர்கள் காரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அங்குள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்களை சூறையாடியதாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராமமக்கள் காரையூர்- புதுக்கோட்டை சாலையில் ஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்குட்டுவேலன், பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சூறையாடிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் காரையூர்- புதுக்கோட்டை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதற்கிடையே காரையூர் போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலாளர் பழனியப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியை சேர்ந்த முருகன் மகன் பாரதிதாசன், பெருமாள் மகன் பழனிச்சாமி, பாண்டியன் மகன் பிச்சைமுத்து, சேது மகன் சரவணன், ரெங்கன் மகன் கண்ணன், ஜெயம் மகன் ஆனந்த் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் கண்ணன், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.