டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்துபா.ம.க.வினர் சாலை மறியல்276 பேர் கைது


டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்துபா.ம.க.வினர் சாலை மறியல்276 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சி மவாட்டத்தில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 276 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிக்காக நெற்பயிர்களை அழித்து நிலத்தை கையகப்படுத்தியதை கண்டித்து நேற்று நெய்வேலியில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாசை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் ரமேஷ், வன்னியர் சங்க தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் நாராயணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்துவிட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதில் பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சிவராமன், மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகி சக்தி, ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் மணிகண்டன், நகர செயலாளர் பிரபு, தியாகதுருகம் நகர செயலாளர் முருகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அமரன், விவசாய அணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பாபு, உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் கச்சிராயப்பாளையம் சாலை, சென்னை, சேலம், சங்கராபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தியாகதுருகம்

இதேபோன்று தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் பா.ம.க. நகர செயலாளர் மணிமாறன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட மணிமாறன் உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு தலைமையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் லோகநாதன், பழனிவேல் வக்கீல்கள் முருகன், கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், பாண்டுரங்கன், கண்ணன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர செயலாளர் ஜெகன், நகர தலைவர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களில் 100 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வானாபுரத்தில் ஒன்றிய தலைவர் பழனி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரையும், ரிஷிவந்தியத்தில் மறியலில் ஈடுபட்ட 23 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் டாக்டர் ராஜா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், நகர செயலாளர் சண்முகம், நகரத்தலைவர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், வக்கீல்கள் அழகேசன், பாபு, கணேஷ், சாந்தகுமார், சரத்குமார், நகர நிர்வாகிகள் சங்கர், தினேஷ், ஊடகப் பேரவை சிவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story