பள்ளிபாளையம் அருகே ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்த 7 பேர் அதிரடி கைது டிரைவர், சாமியார் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


பள்ளிபாளையம் அருகே   ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்த 7 பேர் அதிரடி கைது  டிரைவர், சாமியார் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x

பள்ளிபாளையம் அருகே ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்த 7 பேர் அதிரடி கைது டிரைவர், சாமியார் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே ஜவுளி அதிபர் வீட்டில் நடந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் டிரைவர், சாமியார் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

5 தனிப்படைகள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். ஜவுளி அதிபர். கடந்த 8-ந் தேதி ஜெயபிரகாசின் தந்தை மணி (வயது 70), தாய் பழனியம்மாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது காரில் வீட்டுக்கு வந்த 12 பேர் கொண்ட கும்பல் மணியை கட்டிபோட்டு பழனியம்மாளை மிரட்டி வீட்டில் இருந்த ரூ.28 லட்சம், 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த துணிகர கொள்ளை குறித்து ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசாமி, மகாலட்சுமி, பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், மதன் வெற்றிவேல், செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

வாகன சோதனை

அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே கடந்த 8-ந் தேதி சேலம் மாவட்டம் மல்லூர் சோதனைச்சாவடியில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில், அவர்கள் 4 பேரும் பள்ளிபாளையம் ஜவுளி அதிபர் வீட்டில் பணம், நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 ேபரையும் பிடித்து பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 2,500 மற்றும் வாடகை கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 4 பேர் அளித்த தகவலின்பேரில் போலீசார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த 2 ேபர் மற்றும் கரூரை சேர்ந்த ஒருவரை பிடித்து பள்ளிபாளையத்துக்கு அழைத்து வந்தனர்.

சாமியார் அளித்த திட்டம்

இதையடுத்து பிடிபட்ட 7 பேரும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் ஜவுளி அதிபர் வீட்டில் டிரைவராக வேலை செய்த ராமராஜ் (38) மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கொடுத்த திட்டத்தின்படி ஜவுளி அதிபர் வீட்டில் பணம், நகை கொள்ளை அடித்ததாக தெரிவித்தனர். மேலும் டிரைவர் ராமராஜ் திருவண்ணாமலையில் உள்ள கோவிலுக்கு சென்றபோது சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், சாமியார் அவரிடம் புதையல் ஆசை குறித்து கூறினார்.

பின்னர் ராமராஜ் மூலம் சாமியார் பள்ளிபாளையத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு பணம், நகை அதிகளவில் இருப்பதை அறிந்து கொண்டார். இதையடுத்து பணம், நகையை கொள்ளையடிக்க நினைத்த சாமியார் மதுரையில் இருந்து ஆட்களை தயார் செய்தார். அதன்படி காரில் 12 பேர் கொண்ட கும்பல் ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்று பணம், நகையை கொள்ளையடித்து விட்டு சேலம் சென்றனர். பின்னர் அங்கிருந்து வாடகை கார் மூலம் 2 குழுவாக பிரிந்து பணத்தை பிரித்து சென்று விட்டனர். அவ்வாறு ஒரு குழுவினர் சென்ற கார் மல்லூர் சோதனைச்சாவடியில் போலீசாரிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.

7 பேர் ைகது

இதனை தொடர்ந்து போலீசார் மதுரை சோழவந்தானை சேர்ந்த பெரியமருது (25), மதுரை அரசரடி பகுதியை சேர்ந்த சரவணன் (24), மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்த ரஞ்சித் தேவி (24), புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ் (25), வாடிப்பட்டியை சேர்ந்த ஜெகதீஷ், புதுக்ேகாட்டை மட்டப்பாறையை சேர்ந்த சோமசுந்தரம் (42), திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த ராஜேந்திரன் (46) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கொள்ளை வழக்கில் தலைமறைவான டிரைவர் ராமராஜ், சாமியார் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு பணம், நகை பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படையினருக்கு பாராட்டு

இந்த கொள்ளை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு விரைவில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திர மவுலி பரிசு வழங்கி பாராட்டினார்.


Next Story