பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்


பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
x

இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திண்டுக்கல்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள்.

அதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது.

அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

மறுநாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story