பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்


பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்
x

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

பழனி மாரியம்மன் கோவில்

பழனி கிழக்கு ரதவீதியில், முருகன் கோவிலின் உப கோவிலான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழா, கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் 12-ம் நாளான நேற்று இரவு மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, சிறப்பு யாகம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடிப்படம் கோவிலை வலம் வந்து, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது கொடிமரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடத்தப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண சிறப்பு அலங்காரத்தில் கொடிமண்டபத்தில் அம்மமன் எழுந்தருளினார்.

அக்னி சட்டி எடுத்தல்

இதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் மாரியம்மன் வலம் வருதல், அக்னி சட்டி எடுத்து கம்பத்தில் வைத்தல், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

கொடியேற்ற நிகழ்ச்சிகளுக்கான பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணி மற்றும் குருக்கள்கள் செய்திருந்தனர். கோவில் இணை ஆணையர் நடராஜன், கோவில் கண்காணிப்பாளா அழகர், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ், பெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம், நகராட்சி கவுன்சிலர் பத்மினி முருகானந்தம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.40 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. 9-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாக்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story