பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்


பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாக்கு உலர்த்தும் பணி நடந்து வருகிறது. எனவே, பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை,

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாக்கு உலர்த்தும் பணி நடந்து வருகிறது. எனவே, பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பச்சை பாக்கு

ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்த போது, தென்னை மரங்களுக்கு இடையே விவசாயிகள் ஊடுபயிராக பாக்கு மரங்களை பயிரிட்டனர். பாக்கில் மொகித்மங்களா, குட்டமங்களா என 2 ரகங்கள் உள்ளன. நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பாக்கு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் பச்சை பாக்கை உலர்த்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தற்போது பச்சை பாக்கு கிலோ ரூ.55 முதல் ரூ.60-க்கும் பாக்கு பழம் ரூ.65-க்கும் கேரளாவுக்கு விற்பனைக்கு செய்யப்படுகிறது. பச்சை பாக்கை உலர்த்தி காய வைத்து கொடுத்தால் ஒரு கிலோ ரூ.125 முதல் ரூ.175 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கொள்முதல் ைமயம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள உலர் கலங்களில் உலர்த்தி, விலை குறையும் சமயத்தில் விற்பனைக்கூடத்தில் நாளொன்றுக்கு ஒரு மூட்டைக்கு 10 பைசா செலுத்தி இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெறலாம்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய் விலை வீழ்ச்சியை சந்தித்தபோது, பலரும் ஊடுபயிராக பாக்கு பயிரிட்டனர். பாக்கு மரத்தில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் பெற இயலும். அறுவடை நேரத்தில் இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து, விவசாயிகளிடம் குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த மாதத்தில் வெளிமாநிலங்களில் ஒரு கிலோ பச்சை பாக்கு ரூ.80-க்கும் உலர்ந்த பாக்கு ரூ.200-க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் ஆனைமலையில் பச்சை பாக்கு ரூ.40-க்கும், உலர்ந்த பாக்கு ரூ.140-க்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் விலை குறைவால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, அறுவடை சமயத்தில் நெல் கொள்முதல் மையம் தொடங்குவது போல் பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story