கயிறு அறுந்ததால் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி
வணிக வளாகத்தின் 4-வது மாடியில் உள்ள கடையில் கயிறு கட்டி பெயிண்டு அடிக்கும் போது கயிறு அறுந்ததால் கீழே தவறி விழுந்த பெயிண்டர் பலியானார்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தின் 4-வது மாடியில் உள்ள ஒரு கடையில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் கயிற்றில் தொங்கியபடியே பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததால் அய்யப்பன், 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், அவருக்கு தலை யில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்தார். உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் குமார் (21). இவர், பட்டாபிராம் தென்றல் நகரில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று காலை இவர் வீட்டின் மாடிக்கு சென்று சுற்றுச்சுவர் மீது அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்த ராகுல்குமார் கட்டிடத்தை ஒட்டிச்சென்ற மின்கம்பியில் விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த ராகுல்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.