நிதி நிறுவன ஊழியர்களின் தொந்தரவால் பெயிண்டர் தற்கொலை
திருவட்டார் அருகே வாகனத்தை நிதிநிறுவனம் பறிமுதல் செய்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே வாகனத்தை நிதிநிறுவனம் பறிமுதல் செய்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்த பெயிண்டர்
திருவட்டார் அருகே உள்ள தெற்றிகோடு ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் கோல்டுவின் (வயது 52), பெயிண்டர். இவர் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கினார். அதற்கான தொகையை தவணை முறையில் ஒரு நிதி நிறுவனத்துக்கு செலுத்தி வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய கோல்டுவின் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.
சாவு
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை கோல்டுவின் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தியதில், கோல்டுவின் தவணை தொகை சரியாக செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. நிதி நிறுவன ஊழியர்களின் தொந்தரவால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் நடந்த கூட்டத்தில் கோல்டுவினுடன் சிலர் தகராறு செய்ததாக தெரிகிறது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
வாகன தவணை...
மேலும் இதுகுறித்து அவரது மனைவி மேரி கிங்ஸ்லி பிரபா (45) திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள், இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.