கிணற்றில் தள்ளி மகனை கொன்ற பெயிண்டர் கைது
புளியங்குடி அருகே கிணற்றில் தள்ளி மகனை கொன்ற வழக்கில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி:
புளியங்குடி அருகே கிணற்றில் தள்ளி மகனை கொன்ற வழக்கில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் கொலை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45). பெயிண்டரான இவரது மனைவி கார்த்தீஸ்வரி (40). இவர்களது மகன் மகிழன் (6). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
மனைவி நடத்தையில் முனியாண்டி சந்தேகப்பட்டதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முனியாண்டி தனது மகன் மகிழனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு புளியங்குடி அருகே நவாசாலை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் மகிழனை தள்ளிவிட்டு முனியாண்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தந்தை கைது
இந்த நிலையில் சிவகிரி அருகே ராயகிரி பஸ்நிறுத்தம் பகுதியில் பதுங்கிருந்த முனியாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனது வாழ்க்கையில் சில குழப்பங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நான் எனது மகன் மகிழனை பள்ளியில் இருந்து புளியங்குடிக்கு அழைத்துச் சென்றேன். டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு புளியங்குடி அருகே உள்ள நவாசாலை கிராமத்திற்கு மேற்கே தனியார் தோப்பிற்கு மகிழனை அழைத்து சென்றேன். அங்கு வைத்து மது அருந்திவிட்டு, அருகில் இருந்த கிணற்றில் மகிழனை தள்ளிவிட்டு கொலை செய்தேன்.
மேற்கண்டவாறு முனியாண்டி வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து முனியாண்டியை போலீசார், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகாளீஸ்வரி, முனியாண்டியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் முனியாண்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.