பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்


பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
x

சென்னை தியாகராயநகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள பத்மாவதி கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கம் எழுப்பினர்.

சென்னை,

சென்னை, தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான இடம், தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டது. இந்த இடத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் பத்மாவதி தாயார் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடத்தப்பட்டன. திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவார பாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரகங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

கும்பாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம், பத்மாவதி தாயார் சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடந்தது. பத்மாவதி தாயார் சிலை 4½ அடி உயரம், 3½ அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அனைத்து பணிகளும் நிறைவுற்றதை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் கும்பாபிஷேகத்திற்கான நிகழ்வுகள் தொடங்கியது. மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, ஆலய பிரதக்ஷனா பூஜைகள் நடந்தது. 7.35 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கலசங்களில் புனிதநீர், சாரலாய் வந்த மழை

கும்பாபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்திருந்தனர். கோபுரங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் திரண்டு நின்று கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.

தேவர்களும் வாழ்த்தும் வகையில், கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டபோது, மெல்லிய சாரல் மழை பூமாரி அங்கே பெய்ய தொடங்கியது, மழைத்துளிகள் பன்னீராக தெளிக்க கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கம் எழுப்பினர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து புனிதநீர் கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. உடலில் பட்ட புனித நீரால் மெய்சிலிர்ந்து போன பக்தர்கள் விண் அதிர பக்தி முழக்கத்தை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

திருக்கல்யாணம்

பிற்பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தாயாரை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பத்மாவதி தாயார்-சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.

கும்பாபிஷேக நிகழ்வில், அமைச்சர் சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதிசாமிகள், சுவாத் மனேந்திரா சரஸ்வதிசாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர்கள் வெங்கடலாசலம், தீரஜ், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர் அன்னதானம்

பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் காலை 7.35 மணிக்கு முடிந்ததும், தாயாரை தரிசனம் செய்ய பக்தர்கள் அலைமோதினார்கள். கோவில் அமைந்துள்ள பகுதி குறுகலான இடம் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகமாக இருந்ததாலும் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு திருப்பதி லட்டு வழங்கப்பட்டது. பிரத்யேகமான கூடாரம் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய அன்னதானம் தொடர்ச்சியாக இரவு 9 மணி வரை வழங்கப்பட்டது.

சென்னைக்கு பத்மாவதி தாயார் கொடுத்த பெருமை

திருப்பதியை போன்று பல மாநிலங்களில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பத்மாவதி தாயார் கோவிலை மட்டும் ஆந்திராவை விட்டு வேறு எங்கும் கட்டியதில்லை. முதல் முறையாக பத்மாவதி தாயார் கோவில் ஆந்திராவை தாண்டி கட்டப்பட்டு இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான். அந்த பெருமையை சென்னை தட்டி சென்றுள்ளது.


Next Story