நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது, தமிழக அரசு 2022-2023-ம் ஆண்டிற்கான நெல்லுக்கு ஆதார விலையை அறிவித்துள்ளது. பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,115-ம், சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160-ம் அறிவித்துள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை.
நடப்பாண்டில் நெல் உற்பத்தியின் செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,986 என்று கணக்கிடப்பட்டுள்ளது. உற்பத்தி செலவைவிட லாபம் ரூ.129 தான் அதிகம் என்றால், விவசாயிகளுக்கு எப்படி கட்டுப்படியாகும், அவர்களின் நிலை எவ்வாறு உயரும். நாட்டில் மற்ற துறைகளைவிட விவசாயத்திற்கு மட்டும்தான் இந்த நிலை இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
ஆகவே, தமிழக அரசு, நெல்லுக்கு அளிக்கும் ஊக்கத்தொகையை மேலும் அதிகரித்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கினால்தான், விவசாயிகளுக்கு ஓரளவிற்கு ஆதாயமாக இருக்கும். அதோடு இதுவரை நஷ்ட கணக்கையே பார்த்து வந்த விவசாயிகள் லாபகணக்கை துவங்க முடியும்.
விவசாயமும் வளர்ச்சியடையும். எனவே, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.