17,250 ஏக்கரில் கோடை நெல் நடவு
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 17,250 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 17,250 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதத்தில் திறக்கப்பட்டது.
இதனால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிக அளவு நடைபெற்றது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் ஜூன் மாதம் 12-ந்தேதி அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை நெல் சாகுபடி
இதையடுத்து முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆழ்துளை கிணறு மூலம் மோட்டார் பொருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் தற்போது இந்த முன்பட்ட குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சாகுபடிக்காக உழவுப்பணிகள், நடவு பணிகளில் என தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 30 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாரியம்மன்கோவில் அருகே புறவழிச்சாலையையொட்டி பகுதிகளில் உள்ள வயல்களில் தொழிலாளர்கள் உற்சாகமாக நடவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 17,250 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள்தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை 95 சதவீதம் அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 3 வட்டாரங்களில் மட்ம் 5 ஆயிரம் ஏக்கர் வரை மட்டுமே அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை பணிகள் முடிவடைந்து விடும்.
கடந்த ஆண்டு 30 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதே போல இந்த ஆண்டு அதை விட 3 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 17 ஆயிரத்து 250 ஏக்கர் வரை கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.என்றார்.