விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ஒரே நாளில் 10,100 நெல் மூட்டைகள் வரத்து


விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு  ஒரே நாளில் 10,100 நெல் மூட்டைகள் வரத்து
x

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ஒரே நாளில் 10 ஆயிரத்து 100 நெல் மூட்டைகள் வரத்து காணப்பட்டது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரியது ஆகும். இங்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். அறுவடை காலங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு இங்கு வர்த்தகம் நடைபெறும்.

இந்த நிலையில் தற்போது குறுவை நெல் சாகுபடி பணிகள் முடிவடைந்து அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை மூட்டையாக கட்டி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வாகனங்களில் எடுத்து வந்து விற்பனைக்காக குவித்து வைத்திருப்பதை காண முடிகிறது.

10,100 நெல் மூட்டைகள்

இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் நெல் முட்டைகள் வரை இங்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 10 ஆயிரத்து 100 நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். இதில் ஏ.எஸ்.டி.- 16 ரக நெல் மூட்டை அதிகபட்சமாக ரூ, 1,343-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,189-க்கும், சராசரியாக ரூ.1,286-க்கும் விலை போனது.

அதேபோல் ஏ.டி.டி.-43 ரக நெல் மூட்டை ஒன்று அதிகபட்சமாக ரூ.1,229-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,139-க்கும், சராசரியாக ரூ.1,196-க்கும், பி.பி.டி. என்ற ரக நெல் மூட்டை அதிகபட்சமாக ரூ.1,786-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,459-க்கும், சராசரியாக ரூ.1,626-க்கும் விலை போனது.

அறுவடை தொடங்கி உள்ளதால்...

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி கூறும்போது, விருத்தாச்சலத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அறுவடையான நெல் மூட்டைகளை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக அறுவடை நடைபெறாமல் இருந்தது. தற்போது அறுவடை தொடங்கியுள்ளதால் தினந்தோறும் 15 ஆயிரம் நெல் முட்டைகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.


Next Story