தமிழகம் முழுவதும் 23-ந் தேதிஊராட்சிகள் தோறும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


தமிழகம் முழுவதும் 23-ந் தேதிஊராட்சிகள் தோறும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல்

காவிரி தண்ணீரை வழங்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடும் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது கண்டிக்கத்தக்கது. முதல்-அமைச்சருக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை. அவரது கட்சியினர் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிப்பதற்காக கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளம் வரை காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க முடியாது என மத்திய நீர்வளத்துறை மந்திரி நாடாளுமன்றத்தில் அறிவித்துவிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 23-ந் தேதி தமிழகம் முழுவதும் ஊராட்சி வாரியாகவும், நகராட்சிகளில் வார்டு வாரியாகவும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு சாதகமாக அமையும் என முதல்-அமைச்சர் சொல்வதில் இருந்தே அவர் மிகுந்த பயத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றவாளி கூண்டில் நின்றே தீர வேண்டும். தப்பிக்கவே முடியாது. நாங்கள் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்பதை அறிவித்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட கூற முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story