எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நேற்று நடந்தது.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலையொட்டி எருது விடும் விழா நடந்தது. இதையொட்டி மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்றிருந்தனர். ஆனால் பாதுகாப்பிற்காக தடுப்புகள் எதுவும் அமைக்காததால், மாடுகள் பல இடங்களில் கூட்டத்திற்குள் புகுந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகினர். இதேபோல், பழையபேட்டை மேல்தெருவில், 50-க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனர். ஆனால் பாதுகாப்பிற்காக போலீசாரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கிட்டம்பட்டி
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்பட்டன. இதற்காக அந்த பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாடுகள் துள்ளி குதித்தபடி ஓடி வந்தன. எருது விடும் விழாவை கிட்டம்பட்டி சுற்று வட்டார பகுதிகளை பொதுமக்ள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. இதில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் எருதுகளை கொண்டு வந்திருந்தனர். எருது விடும் விழாவை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி, பத்திகவுண்டனூர் மற்றும் கேரட்டி ஆகிய கிராமங்களில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் காளைகளின் கொம்புகளில் பலூன்கள் மற்றும் அலங்கார தடுக்குகள் கட்டப்பட்டு கூட்டத்தின் நடுவே அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் சீறிபாய்ந்து வந்த காளைகளை அடக்கி அதில் கட்டப்பட்டிருந்த தடுக்குகள் மற்றும் பரிசு பொருட்களை பறித்து சென்றனர். இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.
காவேரிப்பட்டணத்தில் மாட்டுப்பொங்கல் திருவிழாவையொட்டி மாடு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சந்தாபுரம், காவேரிப்பட்டணம், கருக்கன்சாவடி, ஜமேதார்மேடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மாடுகளை கொண்டு வந்தனர். அவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு பூஜை செய்தனர். தொடர்ந்து பாலக்கோடு கூட்ரோடு பகுதியில் இருந்து மாரியம்மன் கோவில் வரை மாடுகளை ஓடவிட்டனர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.