ஆருப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா
பொங்கல் விழாவையொட்டி சூளகிரி அருகே ஆருப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சூளகிரி
பொங்கல் விழாவையொட்டி சூளகிரி அருகே ஆருப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பொங்கல் விழாவையொட்டி, எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆருப்பள்ளி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி சூளகிரி, உத்தனப்பள்ளி, பேரிகை, அத்திமுகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டு இருந்தன.
விழாவை, மாநில தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது மாடுபிடி வீரர்கள் காளைகளை விரட்டிச் சென்று அடக்கி கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களை பறிக்க முயன்றனர். வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன
10 பேர் காயம்
இந்த காளைகள் சீறிப்பாய்ந்தவாறு துள்ளிச்சென்றன. ஆனால் காளைகள் அவர்களிடம் சிக்காமல் போக்கு காட்டியவாறு புழுதி கிளப்பி, மைதானத்தை சுற்றி, சுற்றி வந்தன. அப்போது, அங்கு வேடிக்கை பார்க்க கூடி இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் காளைகள் பார்வையாளர் கூட்டத்தில் புகுந்தன.
எருது விடும் விழாவில், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விழாவில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் ஓடிய பல காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.