எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் மனு கொடுத்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நல சங்க மாவட்ட தலைவர் செல்வம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில துணை தலைவர் சக்கரபாணி நிர்வாகிகள் கனகராஜ், ரத்தினமணி மற்றும் கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி ஒன்றியங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றிய பிறகும் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை அரசிதழில் சேர்க்கவில்லை. நாட்டு மாடு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்குவது காலந்தோறும் நடந்து வரும் பல்லுயிர் கலாசார விழாவாகும்.
அனுமதி வழங்க வேண்டும்
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்க்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துகிறது. மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்படாத, விடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும். எருது விடும் விழாவை பல்லுயிர் கலாச்சார விழாவாக அறிவிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான கருத்துக்களை பதிவிட்டு வாதிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.