ரூ.88 கோடி மோசடி புகாரில் உரிமையாளரின் வீடு, கார் பறிமுதல்
தர்மபுரியில் தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.88 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட உரிமையாளரின் வீடு, கார் மற்றும் 4 கணினிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
முதலீட்டாளர்கள் புகார்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அருண்ராஜா (வயது 37), ஜெகன் (39). இவர்கள் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு முதல் தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1800 வீதம், 100 நாட்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி தரப்படும் என ஆசைவார்த்தை கூறி தகவல்களை பரப்பி வாடிக்கையாளர்களை சேர்த்தனர்.
இதை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து முதலீடு செய்தனர். சிறிது காலத்திற்கு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கிய இந்த நிறுவனத்தினரை பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் 68 பேர் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். ரூ.88 கோடி மோசடி நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்திற்கு தர்மபுரி உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள அலுவலகங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
வீடு, கார் பறிமுதல்
இதைத் தொடர்ந்து மோசடி, தமிழ்நாடு சிறப்பு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ராஜா, ஜெகன் ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அருண்ராஜாவை 3 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.68 கோடி தொகையை பலருக்கு பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் தகவல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தர்மபுரியில் உள்ள அருண் ராஜாவுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடு, ரூ.25 லட்சம் மதிப்பிலான கார், 4 கணினிகள் ஆகியவற்றை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணைக்கு பின் அருண் ராஜா மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.