உளுந்தூர்பேட்டையில் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த லாரி அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர்தப்பினர்
உளுந்தூர்பேட்டையில் டயர் வெடித்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர்தப்பினார்கள்.
உளுந்தூர்பேட்டை,
சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சிவகங்கை பகுதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 34) என்பவர் ஓட்டினார்.
லாரி, நேற்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் இடது பக்க முன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானாவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
போலீசார் ஓட்டம்
இந்த விபத்தின் போது லாரியில் ஏற்றி வரப்பட்ட இரும்பு தகடுகள் சரிந்து அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரின் வாகனத்துக்கு அருகே மளமளவென சரிந்து விழுந்தது.
இதனால், வாகனத்தை நிறுத்திவிட்டு போலீசார் ஓடிவிட்டனர். பின்னர் மீண்டும் அங்கு வந்த போலீசார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரி கவிழ்ந்து இரும்பு தகடுகள் சாலையில் சரிந்த விபத்தில் போலீசார் நூல் இழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.