முட்செடிகள் நிரம்பி புதர்போல் காட்சியளிக்கிறது: பாழடைந்து கிடக்கும் கோவில் குளம் சீரமைக்கப்படுமா? நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை


முட்செடிகள் நிரம்பி புதர்போல் காட்சியளிக்கிறது: பாழடைந்து கிடக்கும் கோவில் குளம் சீரமைக்கப்படுமா? நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
x

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மிகவும் பழமை வாய்ந்த தங்காதலி அம்மாள் சமேத வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில்களுடன் இணைந்த உப கோவில் ஆகும். பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற மூவரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். மேலும் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தளங்களில் இது 16-வது தலமாகும். இக்கோவில் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கோவிலுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இந்த கோவில் குளத்தை முறையாக பராமரிக்காத காரணத்தால் குளம் முழுவதும் முட்செடிகள் நிரம்பி புதர்போல் காட்சியளிக்கிறது. மேலும் குளத்தின் நடுவில் உள்ள மண்டபமும் பாழடைந்து மண்டபத்தின் மீது மரங்கள் வளர்ந்து மிகவும் சேதம் அடைந்து வருகிறது.

பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கும் இந்த கோவில் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த நபர்கள் குப்பைகளை வீசி மேலும் அசுத்தம் செய்து வருகின்றனர். மேலும் இந்த குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாயை சரி செய்யாத காரணத்தால் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் இந்த குளத்திற்கு தண்ணீர் வர முடியாமல் குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக இந்த கோவில் குளத்தில் நீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. எனவே முறையான பராமரிப்பின்றி முச்செடிகள் வளர்ந்து பாழடைந்து கிடக்கும் இந்த கோவில் குளத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றும், மழைக்காலங்களில் தண்ணீர் கொண்டுவர ஏதுவாக பருவமழை தொடங்குவதற்க்குள் குளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story