ஊட்டி படகு இல்லத்தில் கோடை சீசனில் 6¾ லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்-அதிகாரிகள் தகவல்
ஊட்டி
ஊட்டி படகு இல்லத்தில் இந்த ஆண்டு கோடை சீசனில் 6¾ லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை சீசன்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இந்தநிலையில் கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 8½ லட்சம் பேர் வந்து சென்றனர்.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு ஏழாம் தேதி என்று அறிவிக்கப்பட்டதால் கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே உள்ளது வெளிமாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி சுமார் 25 ஆயிரம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர். வார விடுமுறை தினமான நேற்று ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்கா, பைன்பாரஸ்ட், காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது.
6¾ லட்சம் பேர் வருகை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகளில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படகு சவாரியின் போது, சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங்களையும், மான் பூங்காவில் உள்ள கடாமான்களையும், ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசித்தனர். இதேபோல் ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திற்கு புதுமண தம்பதிகள் வருகை தந்தனர்.
கடந்த ஆண்டு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் படகு இல்லத்தில் சுமார் 5½ லட்சம் பேர் படகு சவாரி செய்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 6¾ லட்சம் பேர் படகு சவாரி செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று அவ்வப்போது மழை பெய்ததாலும் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் ஆர்வமுடன் படகு சவாரி செய்தனர்.