குரூப்-1 பதவிகளுக்கு காலியான 66 பணியிடங்களில் 57 இடங்களை தக்கவைத்து சாதனை படைத்த பெண்கள்; டி.என்.பி.எஸ்.சி. இறுதிப்பட்டியல் அறிவிப்பு


குரூப்-1 பதவிகளுக்கு காலியான 66 பணியிடங்களில் 57 இடங்களை தக்கவைத்து சாதனை படைத்த பெண்கள்; டி.என்.பி.எஸ்.சி. இறுதிப்பட்டியல் அறிவிப்பு
x

குரூப்-1 பதவிகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், 66 காலி பணியிடங்களில் 57 இடங்களை பெண்களும், 9 இடங்களை ஆண்களும் தக்க வைத்துள்ளனர்.

57 இடங்களை தக்க வைத்தனர்

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 66 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டிலும், முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு இந்த ஆண்டிலும் நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வு முடிவு கடந்த 15-ந்தேதி வெளியானது. முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 66 பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு நிரப்பட்டு இருக்கும் இந்த 66 காலிப் பணியிடங்களில், 57 இடங்களை பெண்களே தக்க வைத்து இருப்பதாகவும், மீதம் உள்ள 9 இடங்களை ஆண்கள் பெற்று இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

முத்திரை பதித்த பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் இடம்பிடிக்கின்றனர். அதேபோல், சமீபத்தில் நடந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில்கூட மாணவிகளே அதிக பேர் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல், பணி சார்ந்த துறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் பெண்களே கோலோச்சி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குரூப்-1 பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்விலும், பெண்கள் அதிக இடங்களை பெற்று முத்திரை பதித்துள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'தமிழ்நாட்டில் இளம்பெண்கள் சாதனை படைத்து இருக்கின்றனர். படிப்பாக இருந்தாலும், போட்டித் தேர்வாக இருந்தாலும் பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள். தமிழகம் பெண்கள் முன்னேற்றத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு ஒரு முன்னோடியாக தமிழகம் உள்ளது' என்றார்.


Next Story