தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில்தபால் நிலையம் உள்பட 3 இடங்களில் மின்னணு தராசுகள் பறிமுதல்: தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் தபால் நிலையம் உள்பட 3 இடங்களில் மின்னணு தராசுகளை பறிமுதல் செய்து தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் பகுதியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் ஒரு தபால் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் முத்திரையிட தவறிய 3 மின்னணு தராசுகளை பறிமுதல் செய்தனர்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் தொழிலாளர் உதவி ஆணையர் க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வார்கள் சூரியன், ஹெர்மஸ் மஸ்கர்னாஸ், பிரேம்குமார், முத்திரை ஆய்வாளர் ஜெனட் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் பகுதியில் உள்ள வங்கிகள், தபால் நிலையங்கள், இதர நிதி நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்பட 80-க்கும் மேற்பட்ட கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
பறிமுதல்
அப்போது ஒரு தபால் நிலையம் உள்பட 3 இடங்களில் முறையாக முத்திரையிட்டு சான்று பெறாத மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பொட்டல பொருட்கள் விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உள்பட அனைத்து பொட்டல பொருட்களிலும், தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பதிவுச்சான்று பெறாமலும், பொட்டல பொருட்களில், அதன் தயாரிப்பாளர், இறக்குமதியாளர் பெயர், முழு முகவரி தயார் செய்த தேதி, அதன் எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஆகியவை இன்றி விற்பனை செய்யப்படுகிறதா என்று 38 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முரண்பாடுகள் காணப்பட்ட 8 கடைகளில் இருந்த பொட்டல பொருட்கள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் எந்தவொரு பொட்டல பொருளிலும் அதன் தயாரிப்பாளர், இறக்குமதியாளர் பெயர், முகவரி, பொருளின் பெயர், தயாரித்த மாதம், வருடம், அதன் எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஆகிய குறிப்புகள் இன்றி விற்பனை செய்யக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. எடையளவு கருவிகளுக்கு முறையாக சான்று பெற வேண்டும். மேற்கண்ட விதிகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பான புகார்களை தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தின் 0461-2340443 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.