சமூக பொருளாதார மேம்பாட்டுப்பணிகள் மேற்கொண்ட நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுப்பணிகள் மேற்கொண்ட நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறைகளை சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகள் மேற்கொண்ட தலைசிறந்த ஒரு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை, நற்சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனி நபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருதினைப் பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம். தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள், சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை ஆகும்.
பரிசீலிக்கப்படும்
மேற்கண்ட நிறுவனங்களால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குவதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரவு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். மேலும், பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளுக்கு விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும்.
நிறுவனங்களின் கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்விருதுக்கு தகுதியான நிறுவனங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் (online) தகுந்த ஆவணங்களுடன் 15.02.2023க்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.