இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு


இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 6 Oct 2024 5:16 PM IST (Updated: 6 Oct 2024 5:50 PM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

சேலம்:

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" சேலம் பத்மவாணி கல்லூரியில் இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இவ்விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயற்கை விவசாயம் மண் வளத்தை மட்டுமல்ல மனித குலத்தையும் வளமாக்குகிறது என பேசினார்.

இத்திருவிழாவின் நோக்கம் குறித்து ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பேசுகையில் "நஞ்சில்லா உணவு, நோயில்லா வாழ்வு இதற்கான தீர்வு தான் இயற்கை விவசாயம். இதற்காக கடந்த 20 வருடமாக மண் காப்போம் இயக்கம் மூலமாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

இன்று வீட்டுக்கொரு நீரிழிவு நோயாளி வீதிக்கொரு கேன்சர் நோயாளி என்ற சூழல் உள்ளது. இதற்கான அடிப்படை காரணம் உணவு நஞ்சாகி இருக்கிறது. எனவே நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்யும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மேலும் விவசாயிகளின் வருமானம் உயரும் வகையில் மதிப்புக்கூட்டுவது, சந்தைப்படுத்துவது மற்றும் அதற்குரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ளும் நோக்கத்திலும் இவ்விழா நடத்தப்படுகிறது" எனப் பேசினார்.

வாழ்த்துரை வழங்கிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி பேசுகையில் "மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. இது மண் வளம் பற்றியது மட்டுமல்ல மனித குலத்தின் வளமும் அதில் தான் இருக்கிறது. மனிதர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிகப்படியான கூட்டம் மருந்து கடைகளில், மருத்துவமனையில் இருப்பதை பார்க்க முடிகிறது. காரணம் மண் வளம் இல்லாமை. இன்றைய இயற்கை சீற்றங்கள் அனைத்திற்கும் நாம் தான் காரணம். 40 ஆண்டுகள் முன்பு கேன்சர் எங்கோ ஒருவருக்கு தான் இருந்தது. இன்று ஊரெங்கும் கேன்சர் மருத்துவமனை, மலட்டுத்தன்மை நீக்கும் மருத்துவமனை பார்க்க முடிகிறது. இதற்கு இயற்கையை காக்க வேண்டும், அதை காப்பதற்காக தான் ஈஷா அறக்கட்டளை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மண் வளத்தை பெருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இது உயர்ந்த நோக்கம் இதற்கு தலை வணங்குகிறோம், இதை ஈஷா மேலும் விரிவுபடுத்த வேண்டும் " இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் ஆர். ஜெகன்நாதன் மற்றும் பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 'தக்காளி சாகுபடியில் - விதை முதல் விற்பனை வரை தொழில்நுட்பங்கள்' எனும் தலைப்பில் முன்னோடி விவசாயி தக்காளி ராமன், 'காய்கறியில் பூச்சிகள், நோய்கள் எளிய தீர்வுகள்' எனும் தலைப்பில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி.நீ. செல்வம், 'நோய்க்கு தீர்வு தரும் காய்கறி வைத்தியம்' எனும் தலைப்பில் 50 ஆயிரம் பேருக்கு காய்கறி வைத்தியம் செய்து சாதனை படைத்த காய்கறி வைத்தியர் அருண் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இவர்களோடு வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு காடு பயிற்சியாளர் விதைத்தீவு பிரியா, 'கொடியில் காய்கறியில் கொட்டிக் கொடுக்கும் வருமானம்' எனும் தலைப்பில் முன்னோடி விவசாயி மாரிமுத்து ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தேசிய ஆய்வு நிறுவனங்களான பெங்களூர் ICAR - IIHR இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகளான செந்தில்குமார் மற்றும் டாக்டர். வி. சங்கர் ஆகியோர் 'மண் மற்றும் பயிர் வளம் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக மகசூலை தரக்கூடிய காய்கறி ரகங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.


Next Story