விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
மத்தூர்:
மத்தூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது.
வாலிபர் மூளைச்சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கொத்தகோட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). பேக்கரி மாஸ்டர். இவர் கடந்த 30-ந் தேதி மாலை மோட்டார்சைக்கிளில் போச்சம்பள்ளி- திருப்பத்தூர் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்த நிலையில் கோவிந்தராஜ் இறந்தார். அவரது உடல் உறுப்புகளான இதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல் ஓசூர் காவேரி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் மற்றொன்று கோவை மருத்துவ கல்லூரிக்கும் உறவினர்கள் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
அரசு சார்பில் மரியாதை
இந்த நிலையில் தமிழக அரசு இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. இதையடுத்து நேற்று உறுப்புகள் தானத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்து கோவிந்தராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, போச்சம்பள்ளி தாசில்தார் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.