அரசாணை 149-ஐ ரத்து செய்து தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


அரசாணை 149-ஐ ரத்து செய்து தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு பணிக்கு இருதேர்வுகளை நடத்துவது சமூக அநீதி என்பதால், ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பில் இருந்தவரை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அதற்கான போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. 2018-ம் ஆண்டு போட்டித்தேர்வு திணிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் போட்டித்தேர்வை ரத்துசெய்வோம் என்று சூளுரைத்திருந்தார்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனால், அரசாணை எண் 149 ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை கொஞ்சமும் மாற்றாமல் செயல்படுத்த தி.மு.க. அரசு தயாராகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போட்டித்தேர்வு எழுதிதான் பணியில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும்

அந்த வகையில் பணம் படைத்த, நகரப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி கிடைப்பதற்கு போட்டித் தேர்வு வகை செய்கிறது. அதனால் தான் இதை சமூக அநீதி என பா.ம.க. விமர்சிக்கிறது.

எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149-ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story