திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு
மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்
மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
மாவட்ட திட்டக்குழு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. திட்டக்குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலை வகித்து பேசியதாவது:-
மாவட்ட திட்டக்குழு கூட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த விவரங்களை தெரிவிக்கலாம். இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்வாய் வசதி தேவை குறித்தும் தெரிவிக்கலாம். கிராமப் பகுதிகளில் குப்பை மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்து கிராம வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களை தூய்மையாக வைத்திருக்க பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது. இதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடிநீர் திட்டப்பணிகளில் விடுபட்டவர்களையும் இணைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட வேண்டும். வளர்ச்சி பணிகள் குறித்து மாநில திட்டக்குழுவிடம் தெரிவித்து அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
நோட்டீஸ் வழங்க உத்தரவு
இந்த கூட்டத்தில் வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அடுத்த கூட்டத்தில் அனைத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து திட்டக்குழு தலைவர் பாபு பேசுகையில், காலை உணவு திட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்து சரியாக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தால், நிதி பெற்று பணிகள் மேற்கொள்ள முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்புக்கும், காலை உணவு திட்டத்துக்கும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் செயற் பொறியாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.