தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திடவும்; புஞ்சை நிலங்களையும், தரிசு நிலங்களையும், தகுந்த விளைச்சல் நிலங்களாக மாற்றிட புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 2,300 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தது. தற்போது, மற்றுமொரு பேரிடியாக கோவையில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 3,900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. முன்னுக்குப் பின் முரணாக செய்வதுதான் திராவிட மாடல் போலும்!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம், கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகே 4,000 ஏக்கரில் ஒரு தொழிற்பேட்டையும், பவானி சாகர் அணைக்கு அருகிலேயே 1,084 ஏக்கரில் ஒரு தொழிற்பேட்டையும் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கெனவே ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து இருக்கின்ற இந்த நிலையில், புதிதாக மேலும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டால் கீழ்பவானி பாசனம், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனம், காளிங்கராயன் பாசனம் ஆகியவற்றால் பலனடையும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக, அன்னூர் வட்டத்திற்குட்பட்ட குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் மற்றும் பொகலூர் கிராமங்கள் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்திற்குட்பட்ட இலுப்பநத்தம் மற்றும் பெள்ளேபாளையம் கிராமங்களில் உள்ள கிட்டத்தட்ட 3,900 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கையகப்படுத்தும் பணிக்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயலாகும். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் தமிழ்நாட்டில் நடப்பது 'விவசாய விரோத மாடல்' ஆட்சி என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தால் எடுக்கப்படவுள்ள நிலத்தில், 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் விவசாய நிலங்கள் என்றும், மீதமுள்ள நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், மேற்படி இடத்தில் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டால் பவானி ஆறு முழுவதும் மாசுபடும் சூழ்நிலை உருவாகும் என்றும், இதன் காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பெரும் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு நோய் பரப்பும் மையமாக மாறிவிடும் என்றும், குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் மூலம் மாசுபட்ட கழிவு நீரைத் தான் குளங்களில் நிரப்ப முடியும் என்றும், இதன்மூலம் இந்தத் திட்டத்தினுடைய நோக்கமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க. அரசின் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையினை கண்டித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டதாகவும், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. விவசாய நிலங்களைப் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு எப்போதும் உண்டு.

'மக்களுக்காகத்தான் திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல' என்பதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஜெயலலிதாவின் வழியில் பயணிக்கின்ற நானும் இதில் உறுதியாக இருக்கிறேன். மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் முன் நிற்கும். அதே சமயத்தில், மக்களுக்கு எதிரான திட்டங்களை கடுமையாக எதிர்க்கும். தற்போது தி.மு.க. அரசால் செயல்படுத்தப்படவுள்ள தொழிற் பேட்டைகள் அப்பாவி விவசாயிகளை நிர்கதியாக்கத் துடிக்கும் திட்டம். விவசாயிகளின் விலா எலும்புகள் மீது எழுப்பப்படும் தி.மு.க. அரசின் இந்தத் திட்டத்தை, விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் 'திராவிட மாடல்' திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

விவசாயிகள் சாமானியர்கள்தான். ஆனால் அவர்கள் ஏமாளிகள் அல்ல. "சாமானியன் தனக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை உணரத் தலைப்பட்டு விட்டான். அக்கிரமத்தைத் தெரிந்து கொண்டு விட்டான். சமுதாயத்தில் தனக்கு இழைக்கப்படும் பொல்லாங்கினை பூரணமாக உய்த்துணர முடிகிறது அவனால். நேர்மைக் கேடான போக்கினை, முறையற்ற செயல்களை உணர்கிறான். விழிப்புணர்ச்சியின் முனைப்பு, எண்ணத் தெளிவின் எழுச்சி மேலோங்கிவிட்டது சாமானியர்களிடம்!" என்றார் பேரறிஞர் அண்ணா.

எனவே, பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மனதில் நிலைநிறுத்தி, சாமானியரை அலட்சியம் செய்யாமல், அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, உலகின் தலையான தொழிலான உழவுத் தொழில் மேலோங்கும் வகையில், உழவர்கள் உயர்வடையும் வகையில், கோயம்புத்தூரில் இரண்டு தொழிற்பேட்டை பூங்காக்கள் அமைக்கும் முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story