புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இரவு நேர பஸ்களை இயக்கக்கூடாது என உத்தரவு
‘மாண்டஸ்’ புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இரவு நேர பஸ்களை இயக்கக்கூடாது என போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதோடு காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறது.
வங்க்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இருந்து 480 கி.மீ காரைக்காலில் இருந்து 390 கி.மீ தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை இரவு நேர பஸ் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பஸ்களை இயக்கக்கூடாது எனவும் போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.