ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை: நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை


ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை: நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை
x

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து உள்ளனர்.

நீலகிரி,

தமிழகத்தில் நீலகிரி உள்பட சில மாவட்டங்களில் (ஆரஞ்சு அலர்ட்) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. தொடர்ந்து மதியம் 12 மணி முதல் 2 மணி வரை காட்டேரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

பகல் நேரங்களில் பனிமூட்டம் காணப்பட்டதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். மாலையில் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 பேர் வந்து உள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மிதக்கும் படகுகள், மரம் அறுக்குள் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். இதைதொடர்ந்து பாதிப்பு அதிகமாக ஏற்படும் என கண்டறியப்பட்ட உள்ள இடங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊட்டியில் மழை பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில், தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் தாலுகா வாரியாக போலீசார், வருவாய்த்துறை இணைந்து பயிற்சி அளித்த முதல் நிலை மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story