சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு ஓபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து..!
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இந்தியாவில் மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் படைப்புகளுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகங்களுக்கான விருதுகள் விவரம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநில மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய 'Chronicle of a Corpse Bearer' நாவலை 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' என்ற தலைப்பில் மாலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எழுத்தாளர் மாலனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "'Chronicle of a Corpse Bearer' என்ற ஆங்கில நாவலை 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' என்ற தலைப்பில் மொழி பெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாடமி விருது (2021) பெற்ற எழுத்தாளர் திரு.மாலன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்; அவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.
மேலும் அண்ணமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஊடகத்துறையின், பத்திரிக்கை துறையின் பிதாமகராக போற்றப்படும் திரு. மாலன் அவர்களின் (மொழிபெயர்ப்பு) படைப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பு பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் மாலன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.