தனியார் மதுபான கடைக்கு எதிர்ப்பு
சிவகாசியில் தனியார் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சிவகாசி பராசக்தி காலனியில் தனியார் மதுபான கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ள நிலையில் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினர் மதுபான கடைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பராசக்தி காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர்குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கரை முருகன், தங்க பாண்டியம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் வெள்ளைச்சாமி, லாசர், பால்ராஜா, நகர செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தனியார் மதுபான கடைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.