தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு


தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு
x

என்.புகழூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குடிநீர் திட்டம் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி அதியமான் கோட்டையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரகுபதி வரவேற்றார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து தெரிவித்தல். தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல். இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் குறித்து விவரித்தல் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேபோல் கோம்புப்பாளையம் ஊராட்சி சார்பில் முனிநாதபுரம் முனியப்பசாமி கோவில் வளாகத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருக்காடுதுறை ஊராட்சி சிறப்பு கிராம கூட்டம் நடைனூரில் ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள் எதிர்ப்பு

என்.புகழூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். நன்செய் புகழூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் குடிநீர் திட்டத்திற்கு எதிராக நன்செய்புகழூர், தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், அஹ்ரகாரம், புகழூர் கஸ்பா, மோதுகாடு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இந்த குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினார்கள். இதில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அப்போது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தவிட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

வறண்டுவிட்டன

தீர்மானத்தின் நகல்களை கரூர் மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போலீசாரிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக கொடுக்க உள்ளனர். நன்செய்புகழூர் பகுதியில் அனைத்து கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும், சுத்தமாக வறண்டுவிட்டதால் பொதுமக்கள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், செவிலியர்கள், வேளாண் துறை அதிகாரிகள், கால்நடைத்துறை மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story