பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், விஷ்ணுவாக்கம் கிராமத்தில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்த கட்டிடம் அமைப்பது தொடர்பாக தனி நபர் ஒருவருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக பஸ் நிறுத்த கட்டிடம் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், நேற்று காலை பஸ் நிறுத்த கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், உள்பட 7 பேர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விஷ்ணுவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 7 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், ஊத்துக்கோட்டை வட்டக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமையில் பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்த்தும், 7 பேரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நேற்று மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5 பெண்கள் உள்பட மொத்தம் 35 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.