புதிய நகராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு
கோட்டகுப்பம் மீன் மாா்க்கெட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு கலெக்டரிடம் 4 மீனவ கிராம பெண்கள் மனு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட 4 கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண் குத்தகைதாரர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப் படுத்தினர். பின்னர் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனுமதித்தனர்.
கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த மீனவ கிராமமக்கள் கூறும்போது, கோட்டகுப்பத்தில் புதிய நகராட்சி அலுவலகம் கட்ட உள்ள இடத்தில் தற்போது பெரிய மீன் மார்கெட் இயங்கி வருகிறது. இதை நம்பி 19 மீன கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 4 மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் 25 ஆண்டுகளாக நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களை விற்பனை செய்து வந்தனர். தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட கோட்டகுப்பம் நகராட்சிக்கு மீன் மார்க்கெட் இருக்கும் இடத்தில் புதிய நகராட்சி அலுவலகம் கட்ட போகிறோம். எனவே இங்கு மீன்களை விற்பனை செய்யக்கூடாது. நாங்கள் தற்காலிகமாக அமைத்து தரும் மார்க்கெட்டில் மீன்களை விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று நகராட்சி தலைவர் கூறிவிட்டார். இதற்கு நாங்கள் தற்போது இருக்கும் இடத்தில் மீன் மார்க்கெட் இருக்க வேண்டும் என்றும் அவரிடம் பலமுறை கூறினோம். இருப்பினும் அதே இடத்தில்தான் நகராட்சி அலுவலகத்தை கட்டி தீருவோம் என்று நகராட்சி தலைவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து 19 கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களும் ஒன்று கூடி பேசியதில் எங்களுக்கு அதே இடத்தில் தான் மீன் மார்க்கெட் அமைய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் நாங்கள் முறையாக கொடுத்து விட்டோம். எங்கள் மனு மீது உரிய பதில் இல்லை என்றால் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி 19 மீனவ கிராம மக்களும் உண்ணா போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.