எதிர்க்கட்சியினர், மாற்று திட்டத்தை கையாளாவிட்டால்எதிர்காலத்தில், பா.ஜனதாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும் - பழ.நெடுமாறன்
எதிர்க்கட்சியினர், மாற்று திட்டத்தை கையாளாவிட்டால் எதிர்காலத்தில் பா.ஜனதாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும் என பழ.நெடுமாறன் கூறினார்.
எதிர்க்கட்சியினர், மாற்று திட்டத்தை கையாளாவிட்டால் எதிர்காலத்தில் பா.ஜனதாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும் என பழ.நெடுமாறன் கூறினார்.
பழ.நெடுமாறன் பேட்டி
நாகை மாவட்டம் நாகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னர்கள் மீது நடவடிக்கை
அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழக கவர்னர் செயல்பட கூடாது. கவர்னர் ரவி மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் போன்று செயல்படும் அனைத்து கவர்னர்கள் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு போட்டியாக கவர்னர்கள் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்களுடைய குறிக்கோள் மாநில அரசுகளுடன் போட்டி போடுவது மட்டும் தான்.
மாற்று திட்டம்
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகள் அகில இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று திட்டத்தை எதிர்க்கட்சியினர் முன்மொழிய வேண்டும்.
ஆனால் எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பா.ஜனதாவை எதிர்க்கக்கூடிய மாற்று திட்டத்தை உருவாக்க முன்வரவில்லை.
முறியடிக்க முடியாத நிலை
ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்து மதம் என்று சொல்லி வரும் பா.ஜனதா, இந்தியாவை இந்து நாடாக மாற்ற துடிக்கிறது. பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் மாற்று திட்டத்தை கையாளாவிட்டால் எதிர்காலத்தில் பா.ஜனதாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உடன் இருந்தனர்.