வாகன அங்காடியை இயக்க மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு


வாகன அங்காடியை இயக்க மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:04 AM IST (Updated: 10 Jun 2023 7:30 AM IST)
t-max-icont-min-icon

வாகன அங்காடியை இயக்க மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்கக மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் ஆகியவை மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தங்கள் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை விற்பனை செய்ய அரியலூர் மாவட்டத்திற்கு 2 'மதி எக்ஸ்பிரஸ்' வாகன அங்காடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய 'மதி எக்ஸ்பிரஸ்' என்ற பெயரிலான வாகன அங்காடியை இயக்க நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படுகிறது. எனவே, மதி எக்ஸ்பிரஸ் இயக்குவதற்கு ஆர்வமும், தகுதியும் உடைய மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள், விதவை மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்து ஓராண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் (என்.ஆர்.எல்.எம். போர்டல்) பதிவு பெற்றிருக்க வேண்டும். எனவே ஆர்வமுடையவர்கள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், அறை எண். 215, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228505 என்ற தொலைபேசி எண்ணையும், 9626644360 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story