'திராவிட மாடல்' குறித்த கருத்து: கவர்னரின் அதிகார எல்லை தாண்டிய அதிகப்பிரசங்கித்தனம் -கி.வீரமணி
‘திராவிட மாடல்' குறித்த கருத்து: கவர்னரின் அதிகார எல்லை தாண்டிய அதிகப்பிரசங்கித்தனம் கி.வீரமணி கண்டனம்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான பேட்டி ஒன்றை தந்து, தமிழ்நாடு 'திராவிட மாடல்' அரசோடும், அவ்வரசைத் தேர்வு செய்த தமிழ்நாட்டு மக்களோடும், கூட்டணி கட்சியினரோடும் வீண் வம்புச் சண்டை, தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிடும் வேறு ஏதோ திட்டத்தின் அடிப்படை யிலே இப்படி தனது எல்லை தாண்டி விஷமக் கருத்துகளை விதைத்திருக்கிறார். அவரது அரசமைப்பு சட்டப் பொறுப்பு மீறிய அந்தப் பேட்டி ஒரு கானல் நீர் வேட்டை, உண்மைக்கு மாறானது என்பது மட்டுமல்ல, அவரது அதிகார எல்லை தாண்டிய அதிகப்பிரசங்கித்தனமும், அறியாமையும், ஆணவமும் கலந்தவையாகவும் இருக்கின்றன.
தமிழ்நாடு 'திராவிட மாடல்' ஆட்சி, அன்றைய நீதிக்கட்சி, திராவிடர் ஆட்சி தொடக்கமாகிய 1920-ம் ஆண்டு முதல் ஒரு நூற்றாண்டு அமைதிப் புரட்சியால் இன்று வளர்ந்தோங்கி 'திராவிட மாடல்' ஆட்சி மற்றவர்களுக்கு வழிகாட்டும் எடுத்துக்காட்டான ஒரு ஆட்சி என்ற சிறப்புடன் இங்கே கம்பீரமாக நடைபோடுகிறது. சனாதன குஜராத் மாடலில் மனுதர்மமே பாடத் திட்டம். திராவிட மாடலில் சமதர்மம், கல்வியில் நுகரப்படச் செய்யும் நுண்ணறிவு. இது எப்படி காலாவதியாகும். 50 ஆண்டுகளாக திராவிடம் இங்கு கொடிக்கட்டி பறக்கிறது. இன்னமும் அக்கட்சிகளின் தோள்கள்தானே மத்தியில் ஆளும் அகில இந்தியக் கட்சிகளுக்கு தங்களது உயரம் காட்ட தேவைப்படுகிறது. திராவிட மாடல் தயவில்லாவிட்டால், கட்டிய டெபாசிட் தொகையையும் பெற முடியாது. நோட்டாவையும் தாண்ட முடியாது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.