தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்


தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பஸ்கள்  இயக்கம்
x
தினத்தந்தி 9 Feb 2024 10:21 AM IST (Updated: 9 Feb 2024 12:02 PM IST)
t-max-icont-min-icon

தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே நூற்றுக்கணக்கானவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பித்ரு பூஜைகள் செய்ய குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கும் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதே போன்று நாளை பிப்ரவரி 10, 11 (சனி, ஞாயிறு) தேதிகளில் வளர்பிறை சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதே போன்று பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 500 பஸ்கள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story