புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு


புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
x

புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், ஜூலை.17-

முசிறி அருகே வாத்தலையில் உள்ள முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றின் இடது கரையில் புள்ளம்பாடி பாசன வாய்க்கால் பிரிகிறது. இப்பாசன வாய்க்காலின் மொத்த நீளம் 90.20 கி.மீ. இது மானோடை ஏரி, ஆண்டிஓடை ஏரி, வேட்டாகுடி ஏரி வழியாக வந்து இறுதியில் சுக்கிரன் ஏரியில் கலக்கிறது. இவ்வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேரடிப் பாசனமாக 8,831 ஏக்கரும், 28 குளங்கள் வாயிலாக 13,283 ஏக்கரும் என 22,114 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கணக்கில் கொண்டு தண்ணீர் திறக்க பாசன விதி தொகுப்பில் ஆகஸ்டு 1-ந் தேதி வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் நிரம்பி உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் முன்னதாகவே 16-ந்தேதியன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக நேற்று புள்ளம்பாடி பாசன வாய்க்காலில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கதிரவன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story