திருவாரூர், நாகை மாவட்ட குறுவை பாசனத்திற்காக மூணாறு தலைப்பு அணை திறப்பு
நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
நீடாமங்கலம் அருகேயுள்ளது மூணாறு தலைப்பு. இதனை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பர். வருடம்தோறும் ஜீன் 12 ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு அந்த நீரானது கல்லணையை வந்தடைந்தவுடன் கல்லணை திறக்கப்படும். கல்லணை நீரானது பெரியவெண்ணாற்றில் மூணாறு தலைப்பை வந்தடையும். மூணாறு தலைப்பிலிருந்து பிரியும் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய ஆறுகளின் மூலம் திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் 2022-2023 ஆம் ஆண்டு காவேரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக கடந்த 24-ம்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூரிலிருந்து முதலில் 3000 கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக நிலை உயர்த்தி 10,000 கனஅடியாக எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து 27-ம் தேதி மாலை 5.00 மணி முதல் கல்லணையிலிருந்து டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.அந்த நீரானது நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணைக்கு நேற்று இரவு வந்தடைந்தது.
பின்னர் பொதுப்பணித்துறையினரால் மூணாறு தலைப்பிலிருந்து திருவாரூர், நாகை மாவட்ட குறுவை சாகுபடி பாசனத்திற்காக முதலில் வெண்ணாற்றில் 208 கனஅடியும், கோரையாற்றில் 1024 கன அடியும், பாமணியாற்றில் 410 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை 6 மணியிலிருந்து வெண்ணாற்றில் 917 கனஅடியும், கோரையாற்றில் 1349 கன அடியும், பாமணியாற்றில் 410 கன அடியும் மொத்தம் 2 ஆயிரத்து 676 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மூன்று ஆறுகளிலும் சீறிப்பாய்ந்தோடும் இந்த நீரானது குறுவை சாகுபடிக்கு வெண்ணாற்றின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கர், கோரையாற்றின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கர், பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும்.